உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழக அரசால் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று 100 இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட முகாமை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ துவக்கி வைத்தார்.பள்ளப்பட்டி நகர் மன்ற தலைவி முனவர் ஜான் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கு பெற்று பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் அதற்கான படிவத்தை வாங்கி பூர்த்தி செய்த கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கினர்.