தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் காய்ச்சல், இருமல், சளி மற்றும் மழைக்கால நோய்களில் அவதிப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் இன்று 2000 இடங்களில் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘’வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 23.10.2023 தொடங்கி தற்போது வரை வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பரவல் தற்போது அதிகரித்து இருப்பதால் இன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
அதன்படி இன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். மழைக்கால நோய்களிடமிருந்து தங்களைத் தற்காத்து கொள்ள இந்த பரிசோதனை அவசியம்’’ என தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் மழையையும் பொருட்படுத்தாமல் மருத்துவ முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.