சென்னையில் ஆருத்ரா கோல்டு கம்பெனி என்ற நிதி நிறுவனத்தை நடத்தி பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், 2,500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆருத்ரா நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர், அவரது மனைவி உஷா உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதாக நடிகரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே போலீசார் விசாரணையை துவங்கியதையடுத்து ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் துபாய் நாட்டிற்கு தப்பிச்சென்று அங்கு தலைமறைவாக இருந்து வந்தனர். மேலும் துபாயில் சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் பல்வேறு நிறுவனங்களில் ராஜசேகர் முதலீடு செய்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.