தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி ஷீலா. இவர்களின் மகள் சத்திகா (10). 5ம் வகுப்பு மாணவி. கடந்த 4ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த சிறுமியின் இடது கையில், கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது. இதனால் அலறி துடித்த சிறுமியை அவரது பெற்றோர் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமி தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமிக்கு பாம்பு கடித்ததால் ரத்தம் உறைதல் குறைபாடு மற்றும் தற்காலிக சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதை கண்டறிந்து பாம்புகடி விஷமுறிவு சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். மருத்துவக்குழுவினர் தொடர் கண்காணிப்பில் இருந்த சிறுமி உடல் நலம் தேறினார். இதையடுத்து 27 நாட்களுக்கு பிறகு நேற்று சிறுமி சத்திகா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவக்கல்லுாரி டீன் பாலாஜிநாதன், நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் ஆகியோர் சிறுமிக்கு பழங்கள் வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளித்த சிறுநீரகத்துறை தலைவர் ராஜ்குமார், டாக்டர் கண்ணன் குழுவினருக்கு டீன் பாலாஜிநாதன் பாராட்டுக்கள் தெரிவித்தார்.