தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக் கூடும். இதற்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி மிக்ஜாம் புயல் உருவாகும். இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு வரை மணிக்கணக்கில் விடாமல் அடைமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பெரும்பாலான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். அடையாறு, கூவம், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட நீர் நிலைகளின் கரைகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் மணல் திட்டுக்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மெரினாவில் சிறிய கடைகள் இருக்கும் பகுதி, ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் இருக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி உருவாகி வடதமிழகம்- தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ம்தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.