மயிர்நீப்பின் உயிர்வாழா கவிரிமான் என்பார்கள். ஆனால் தஞ்சையில் ஒரு முதியவர், தன் மனைவி பிரிவை தாங்க முடியாமல் அடுத்த சிலமணி நேரத்தில் தானும் இயற்கை எய்திவிட்டார். இதைத்தான் ஈருடல் ஓருயிர் என்றார்களோ என்று சொல்லும் அளவுக்கு இருவரும் வாழ்ந்து உள்ளனர். ஒன்றாக வாழ்ந்து ஒன்றாக மரணத்தை தழுவிக்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கோனூர் நாடு கருக்காடிபட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் ராமசாமி (92). இவரது மனைவி வள்ளியம்மை ஆச்சி (85). இவர் நேற்று காலை 8 மணியளவில் வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். மனைவியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத கணவர் ராமசாமி அடுத்த நான்கு மணி நேரத்தில் காலமானார். இருவரும் இணைபிரியாது, மனமொத்து, ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் மனைவியின் பிரிவைத் தாளாத கணவரும் மரணம் அடைந்தது அந்த பகுதியில் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று கருக்காடிப்பட்டி கிராமத்தில் இருவரது உடலும் ஒன்றாக தகனம் செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.