தெலங்கானா மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,990 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.), பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் வாக்குச் சாவடிகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. காலை 9 மணி நிலவரப்படி தெலங்கானாவில் 8.52 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜீனியர் என்.டி.ஆர், ஜிரஞ்சீவி உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றினர். நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தின் ஜுபிளி பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். மையத்தில் அமைக்கப்பட்ட 153-ம் எண் வாக்கு சாவடியில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.