பெரம்பலூர் அருகே ஆத்தூர் சாலையில் கோனோரிபாளையத்தில் நரிக்கரடு மலைகுன்று புறம்போக்கு பகுதியில் உள்ள வாய்க்காலில் ஒரு சாமி சிலை கிடந்துள்ளது. இதனை மாலை 5 மணியளவில் கோனேரிபாளையத்தை சேர்ந்த கருப்பையா மனைவி மஞ்சுளா (45) என்பவர் மாடுமேய்த்துக்கொண்டிருந்த குன்று மேட்டில் மழை நீர் செல்லும் வாய்க்காலில் சாமி சிலை பாதி மண்ணில் புதைந்த நிலையில் கிடந்ததை பார்த்துள்ளார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் விஏஒ அகிலனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்த விஏஓ உடனே சம்பவ இடத்திற்கு சென்று சிலையை எடுத்தார். அந்த சிலை ஒரு அடி உயரமும், 7 கிலோ எடை
கொண்ட வெண்கலத்திலான பழங்கால அம்மன் சிலை ஒன்று பீடம் தனியாகவும், சிலை தனியாகவும் என இரண்டாக உடைந்து நிலையில் கிடந்தது தெரியவந்தது. இது பற்றி தகவலறிந்த பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். இதையடுத்து விஏஓ அகிலன் சாமி சிலையை மீட்டு பெரம்பலூர் தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தார். பின்னர் இந்த சாமி சிலை தாலுகா அலுவலகத்தில் உள்ள பதிவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.