பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார். கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார். தந்தை டாக்ஸி பிஸினஸ் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு கொல்கத்தாவிற்கு குடியேறினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் விக்கெட் கைப்பற்றாத முகேஷ் குமார், 2வது டி20 போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் குமாருக்கும், நெருங்கிய உறவுக்கான பெண்ணும், காதலியுமான திவ்யா சிங்கிற்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்து 8 மாதங்களுக்குப் பிறகு இன்று அவருக்கு திருமணம் நடந்துள்ளது.
திருமணம் காரணமாக கவுகாத்தியில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் முகேஷ் குமார் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஆவேஷ் கான் இடம் பெற்றுள்ளார்.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி டிசம்பர் 1ம் தேதி ராய்பூரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் முகேஷ் குமார் இடம் பெறுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. காதலியை கரம் பிடித்த முகேஷ் குமாருக்கு சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.