தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக கவுன்சிலர் நீலகண்டன் பேசுகையில், மாநகராட்சியில் கடைகள் ஏலம் விட்டத்தில் அதிகளவு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை திருவள்ளுவர் திரையரங்கம் எவ்வளவு தொகைக்கு ஏலம் விடப்பட்டது அதற்கான ஆவணங்கள் வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கு மேயர் சண்.ராமநாதன் ஆவணங்கள் காண்பிக்கப்படும் என்றார். இருப்பினும் கவுன்சிலர் நீலகண்டன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மேயர் சண்.ராமநாதன் பல்வேறு மாநகராட்சிகளில் தங்களுடைய உறுப்பினர்களையே சஸ்பெண்ட் செய்துள்ள நிகழ்வு நடந்துள்ளது. எனவே அந்த நிலைக்கு ஆளாகி விடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்வதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் நாங்கள் எதுவும் கேள்வி கேட்க கூடாது என்றால் எங்களை வெளியே அனுப்பி விடுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி மன்ற கூட்டமே பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.