திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கடந்த2006 ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைத்தது தொடர்பான வழக்கில், இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், திருச்சி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார்.
(ஸ்ரீரங்கம் காவல் நிலைய குற்ற வழக்கு எண்: 749/ 2006 U/S 147 ,148 ,153 (A) IPC, 3 (1) of TNPPD Act -1992 ஸ்ரீரங்கம் கோவிலின் முன்பு பெரியார் சிலையை உடைத்த வழக்கு)
வழக்கில் சம்பந்தப்பட்ட 2சாட்சிகள் இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் டிச13ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
விசாரணைக்காக ஆஜரான இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் …
சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தை, வரும் டிச 2ம் தேதி சென்னை வேளச்சேரியில் நடத்தவுள்ளோம். அதில் பாரத பிரதமர் மோடியின் புகழுக்கு காரணம் ஆன்மீக அரசியலா? அல்லது வளர்ச்சி அரசியலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. அடிமைச் சின்னம் அகற்றிவிட்டு, ராமஜென்ம பூமி மீட்கப்பட்ட, டிசம்பர் 6ம் தேதியன்று எல்லா கோவில்களிலும் ராம மந்திரம் முழங்கவுள்ளோம்.
இந்துகளுக்கு தனி தொகுதி கொண்டு வந்த சீர்திருத்தவாதி அம்பேத்கார் பிறந்த தினம் டிச 6. அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்புகளை மீறி, நீதிமன்றத்தின் அனுமதியோடு டாக்டர் அம்பேத்கரின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளோம்.
தமிழ்நாட்டில் காமராஜர் உள்ளிட்ட தேசிய தலைவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நல்லாட்சி வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.