இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். புயலாக கரையை கடக்குமா? எங்கு கரையை கடக்கும்? என்பதை இனி வரும் நாட்களில் முறையாக கண்காணித்த பிறகே கூற இயலும்.
வங்கக்கடலில் டிச.2ம் தேதி புயல் உருவாகக்கூடும். இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் டிச.2, 3 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும். அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும். வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 8% குறைவாக பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.