பருத்திவீரன்’ படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ‘கார்த்தி 25’ விழாவுக்குத் தனக்கு அழைப்பு வரவில்லை என்று இயக்குநர் அமீர் வெளிப்படையாகக் கூறியதே ‘பருத்திவீரன்’ பிரச்சினை பொதுவெளியில் மீண்டும் பூதாகரமாக வெடிக்கக் காரணமாகும்.
இதனையடுத்து தயாரிப்பாளரான தன்னை இயக்குநர் அமீர் ஏமாற்றி விட்டதாக ஞானவேல்ராஜா பேட்டி கொடுக்க, இதற்கு தன் சொந்த பணத்தைப் போட்டு இந்தப் பிரச்சினையால் படம் எடுத்ததாக அமீர் விளக்கம் கொடுத்தார். அத்துடன் உண்மை தெரிந்தவர்கள் அமைதியாக இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் அமீர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்கரா, கரு.பழனியப்பன், பாரதிராஜா, பொன்வண்ணன் எனத் திரைத்துறையில் உண்மை தெரிந்த பலரும் அமீருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இந்த பிரச்சினை இப்படி போய்க்கொண்டிருக்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘’ ‘பருத்திவீரன்’ பிரச்சினை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுவரை அதைப்பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் அவரைக் குறிப்பிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே அவரது குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன்.
அவரது சமீபத்திய பேட்டிகளில் என்மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள், என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்குப் பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மதிப்பவன் நான்’ எனக் கூறியுள்ளார்.