விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா வாக்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் பள்ளியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், குழந்தைகள் அரசர உதவி அலகின் பணியாளர் ஸ்டெல்லா மேரி ஆகியோர் பள்ளிக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
ஒன்றாம் வகுப்பிலிருந்த 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளை அழைத்து நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அப்போதும் 3, 4-ம் வகுப்புகளில் பயிலும் 2 மாணவிகள் தங்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் கருணாகரன் தங்களிடம் தீய தொடுதலில் ஈடுபட்டதாக கூறினார்கள். அவர்களை தனியாக அழைத்து சம்பவம் குறித்து கேட்டுக்கொண்டிருந்த போது, 3-ம் வகுப்பில் பயிலும் மேலும் 7 மாணவிகளும், 4-ம் வகுப்பில் பயிலும் மேலும் 4 மாணவிகளும் தங்களிடமும் ஆசிரியர் கருணாகரன் தீய தொடுதலில் ஈடுபட்டதாக கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் கருணாகரனிடம் விசாரணை நடத்தியபோது பள்ளி மாணவிகளுக்கு 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி அருகேயுள்ள தொரவிராமன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் கருணாகரன் (வயது 32) என்ற ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைதான ஆசிரியர் கருணாகரனை, விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.