பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
“தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சிறப்பாக நடைபெறும், JR ஒன் ஃபுட்வேர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான், பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிப்காட் தொழில் பூங்காவைத் திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டினேன். சரியாக ஓராண்டு காலத்தில் துவக்க விழாவில் பேசுவதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.
தோல் மற்றும் காலணித் துறைகளை பொறுத்தவரைக்கும், இந்த அரசுப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ நான் வெளியிட்டேன். இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்தத் துறையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.இதுமாதிரியான வளர்ச்சியை பார்க்கும்போது, 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற நம்முடைய இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது.
உலகம் முழுக்க இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வர இருக்கிறார்கள்.அதற்கு முன்பாகவே, ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம், இந்த அதிநவீன உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது மிக மகிழ்ச்சி அளிக்கிறது.சொல்லப்போனால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்னதாகவே, பல நிறுவனங்களோடு துவக்க விழாவை நான் சமீபத்தில் மேற்கொண்டிருக்கிறேன். உங்கள் தொழில் முயற்சி வெற்றி பெறவும், உங்களுடைய திட்டங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற்றிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.இந்தத் தொழில் மேலும் சிறப்படைய அனைத்து உதவிகளையும் இந்த அரசு உறுதியாக செய்யும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பெரம்பலூர் ஆலையில் நடந்த விழாவில் தமிழக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஆ. ராசா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.