Skip to content
Home » கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

  • by Senthil

 

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.அதைத்தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஒரே நேரத்தில் 34 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில்   தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் என 5 மாவட்ட  ஆட்சியர்களுக்கும்   அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதை எதிர்த்து கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்  சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கனிம வள கொள்ளை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள போது, அங்கு நடவடிக்கை எடுக்காமல், தமிழகத்தில் நடவடிக்கை எடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநில நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் அமலாக்க துறை செயல்படுவதாகவும், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகார வரம்பு இல்லை  என்றும் கூறப்பட்டிருக்கிறது.

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, அதிகார பரவலை மீறும் வகையில்,மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக மாநில அரசே விசாரித்து வரும் நிலையில்,மாநில அரசு, புலன் விசாரணை அமைப்புகள் கோரிக்கை விதித்திருந்தாலோ, நீதிமனறம் உத்தரவிட்டிருந்தாலோ மட்டும் தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க முடியும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.மத்திய ஆளுங்கட்சி, ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத் துறையினரின் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும், குறிப்பிட்டு குவாரிகளின் விவரங்களை மட்டும் கோராமல், மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளின் விவரங்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத் துறை மேற்கொள்ளும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்சியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணல் கொள்ளை தொடர்பாக அமலாக்கத்துறை வேறு எந்த மாநிலத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அமலாக்கத்துறை தவறான நடவடிக்கை எடுத்து வருகிறது. அமலாக்கத்துறை வேறு ஒருவர் கைப்பாவையாக செயல்படுகிறது. எந்த ஊழலும் நடைபெறவில்லை. யாரோ ஒருவர் தனியார் தவறு செய்திருந்தால் அதற்காக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்களா? நிதி நிறுவனம், வங்கிகள், இடைத்தரகர்கள் சட்டவிரோத பண நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க முடியும். அமலாக்கத்துறை எந்த அறிவிப்பும் வெளியிடாமல், ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது சட்டவிரோதமானது என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், வழக்கு பதிவு செய்யப்பட்டும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது எப்படி சட்ட விரோதமாக கருத முடியும் என மனுதாரருக்கும், அமலாக்கத்துறை எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது. அதற்கான ஆதாரங்கள் என்ன? சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா? என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வரக்கறிஞர், நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தொடர் விசாரணையில் நடத்தினால் மட்டுமே உண்மை ஆவணங்களை திரட்ட முடியும் என தெரிவித்தார்.இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை 28ம் தேதிக்கு (இன்று)  நீதிபதிகள்  சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் ஒத்திவைத்தனர்.

அதன்படி இந்த வழக்கில்  கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு ஐகோர்ட்  நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.  தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என்றும் தீர்ப்பளித்தனர்.அத்துடன்  மணல் குவாரி தொடர்பாக  அமலாக்கத்துறை விசாரிக்க தடை யில்லை என்றும்   வழக்கு வரும் டிசம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அமலாக்கத்துறை சம்மனுக்கு கலெக்டர்கள், அதிகாரிகள் 3 வாரத்தில் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!