மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். அந்த சிறுமியை பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். . சிறுமியின் சாவில் பல மர்மம் இருந்ததால், திருவாரூர் மருத்துவக்கல்லுரியில் உடல் பரிசோதனை செய்தனர். சிறுமி காய்ச்சல் ஏற்பட்டு ஜன்னி வந்து வலிப்பு ஏற்பட்டதால் உணவுக்குழலில் உணவு சிக்கி மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
அத்துடன் சிறுமி பலமுறை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை ஒன்றை மருத்துவர்கள் கொடுத்தனர். இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அந்த அறிக்கையின்படி தரங்கம்பாடி நீதிமன்றத்தின் அனுமதியுடன் செம்பனார்கோவில் போலீசார், சிறுமியின் உறவினர்கள் 5 பேருக்கு உயிரணு சோதனை செய்தனர். அதில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
எனவே மேலும் 10 நபர்களது உயிரணு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முடிந்து 4 மாதமாகியும் அதன் ரிசல்ட் வெளியிடப்படவில்லை. சிறுமியை பலாத்காரம் செய்தது யார் என்று சொல்லப்படாமல், குற்றவாளி கைது செய்யப்படாமல் போலீசார் வழக்கை கிடப்பில் போட்டு விட்டனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஷங்கமித்திரன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இறந்து போன சிறுமி ஓராண்டாக பாலியல் தொந்தரவு ஆளாக்கப்பட்டுள்ளார் என மருத்துவ அறிக்கை கூறியதும், போக்ஸோ வழக்காக மாற்றிவிட்டு உண்மைக் குற்றவாளிகளை பிடித்திருக்கவேண்டும், குற்றவாளிகளை தப்பவிட்டால் மேலும் இதுபோன்று சிறுமிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவே உடனடியாக தமிழக முதல்வர், காவல்துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என கேட்டுகொண்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்பேரில் சென்னையில் நடத்தப்பட்ட உயிரணு சோதனையை உடனடியாக பெறுவதற்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டார், சோதனை முடிவு வந்ததும் இந்தவழக்கு போக்ஸோ வழக்காகமாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.