கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் இந்திரா நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. அந்த குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதாக துவங்கி தற்பொழுது இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு அதிகாரிகளிடமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை மனுக்கள் அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு பலத்த மழை பெய்தால் வீடுகள் இடிந்து விழும் என்பதால் இம்முறையாவது மாவட்ட நிர்வாகம் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும் அப்பகுதியில் கழிவறை வசதி இல்லாததால் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் எனவே அப்பகுதியில் கழிவறை வசதி செய்து தர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். தேர்தல் வரும் போது மட்டும் அனைத்தையும் சரி செய்து தருகிறோம் என கூறும் அரசியல் கட்சியினர் அதன் பிறகு கண்டு கொள்வதே இல்லை எனவும், அரசு அலுவலர்களும் ஆய்வுகள் மேற்கொண்டு சரி செய்து தருகிறோம் என கூறிவிட்டு செல்வதாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என வேதனை தெரிவித்தனர்.