விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தாலுகா நல்லாப்பாளையம் பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர் சங்கீதா(வயது 28). இவர் நேற்று தனது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அவர் அந்த மனுவில், ‘எனது கணவர் அய்யனார், கடந்த 2014-ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். எனக்கு கமலேஷ்(11) என்ற மகன் உள்ளான். எனது கணவரின் இறப்பு சான்றிதழுக்காக கடந்த செப்டம்பர் மாதம் நான் எனது மாமியார் குப்புவுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று கேட்டபோது அவா் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் கேட்டார். மேலும் எனது செல்போன் எண்ணை கேட்டு வாங்கினார். சில நாட்கள் கழித்து ரூ.3 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து இறப்பு சான்றிதழை பெற்றேன்.
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அவர், என்னை செல்போனில் தொடர்புகொண்டு விதவை உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறியதை அடுத்து நானும் இ-சேவை மையத்தில் பதிவு செய்தேன். அதன் பிறகு அவர், என்னை இரவு நேரத்தில் செல்போனில் தொடர்புகொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுபற்றி நான் எனது தம்பியிடம் கூறினேன். உடனே அவன், கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று தட்டிக்கேட்டதால் என்னுடைய விதவை உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை நிராகரித்து விட்டார். அவர், என்னிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து பேசியதை செல்போனில் பதிவு செய்துள்ளேன். எனவே இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார். அந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஷாகுல் அமீது, நல்லாப்பாளையம் வி.ஏ.ஓ ஆரோக்கிய பாஸ்கர்ராஜை இன்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.