கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு இந்தியன் வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. சிறிது தூரத்திலேயே ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு ஏடிஎம் களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு இருந்துள்ளன. இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்தியன் வங்கியின் ஏடிஎம் மூடப்பட்டது. சிட்டி யூனியன் வங்கியில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில் இயந்திரம் செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் இரண்டு ஏடிஎம் களிலும் பணம் ஏதேனும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஏடிஎம் நுழைவாயில் முன்புள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கமாக இரண்டு ஏடிஎம் களின் முன்பும் நடைபாதையில் இரவு நேரத்தில் சில நபர்கள் மதுபோதையில் படுத்து உறங்கிக் கொள்வது வழக்கம் என்பதாலும் இப்பகுதியில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிவதாலும் அவர்கள் ஏதேனும் இவ்வாறு செய்தார்களா அல்லது கொள்ளை கும்பல் ஏதேனும் செய்ததா என்று விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.