நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் தமிழ்நாடே என் பக்கம் இருக்கிறது. யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் மன்னிப்பு கேட்கும் சாதியா என்றெல்லாம் வாய் சவடால் விட்டார்.
இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் இன்று போலீசில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை. தான் ஆஜராவதற்கு ஒரு நாள் அவகாசம் அளிக்கும்படி போலீஸ் நிலையத்துக்கு கடிதம் அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில் 15 நாட்களாக தொடர் இருமலாக உள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் நேரில் ஆஜராக ஒரு நாள் விலக்கு அளிக்க கோரி உள்ளார்.
அந்த கோரிக்கையை போலீசாரும் ஏற்றுக்கொண்டு நாளை காலை 10 மணிக்கு போலீசில் ஆஜராகும்படி கூறி உள்ளனர்.
இந்த நிலையில் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்துபோன நிலையில் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்துவிடும், அதில் தனக்கு ஜாமீன் கிடைத்து விடும் என கருதி அவர் இந்த கடிதத்தை அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது.