Skip to content
Home » உத்தரகாண்ட் சுரங்க விபத்து…. மீட்பு பணியில் திருச்செங்கோடு வல்லுனர்கள்….

உத்தரகாண்ட் சுரங்க விபத்து…. மீட்பு பணியில் திருச்செங்கோடு வல்லுனர்கள்….

  • by Senthil

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே, சில்க்யாரா – பர்கோட் இடையே  மலையை குடைந்து 4.5 கி.மீ. சுரங்கப் பாதை அமைக்கும்பணி நடந்து வந்தது. அங்கு கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்ட நிலையில்,சுரங்கப் பாதைக்குள் வேலை செய்துகொண்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். அவர்களை மீட்கும் பணி கடந்த 12 நாட்களாக இன்றும் நடந்து வருகிறது.

திங்கள்கிழமை மாலையில் மீட்புக்குழுவினர் 6 அங்குலம் குழாய் மூலமாக சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு வாழைப்பழம், ஆரஞ்சுப்பழங்கள், மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. செவ்வாய்க்கிழமை மாலையில், அவர்களுக்கு வெஜ் புலாவ், பனீர் மதர் சப்பாத்தி வழங்கப்பட்டன. அதேபோல், சுரங்கத்துக்குள் எண்டோஸ்கோபி காமிரா அனுப்பப்பட்டு உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் முதல்முறையாக படம்பிடிக்கப்பட்டனர்.

இந்த படத்தை பார்த்த பிறகு தான் 41 தொழிலாளர்களின் குடும்பத்தினரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதற்கிடையே இந்த மீட்பு பணியில்  தமிழகத்தின் தொழில் நுட்பம் தான் உதவியுள்ளது என்ற தகவல் கிடைத்து உள்ளது.  இந்தியா முழுவதும் பரவலாக  போர்வெல் பணிகளை செய்து வருபவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்ங்செங்கோட்டை சேர்ந்தவர்கள்.

தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் இம்மாதிரியான பணிகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களை கொண்டது ஆகும். இவர்களது முயற்சியால் தான், தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு இவர்கள் ரிக் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான பிஆர்டி நிறுவனம் தயாரித்த ஜிடி-5 என்ற நவீன வசதிகள் கொண்ட ரிக்கை பயன்படுத்துகின்றனர். இந்த ரிக் மிகவும் நவீனமானது. 360 டிகிரியில் சுழலும் வசதி கொண்டது. அதனால் கீழே, மேலே, பக்கவாட்டு என எந்த நிலையிலும் துளையிடும் திறன் கொண்டது. 6 அங்குல விட்டத்துடன் பாறைகளை உடைத்து, 80 மீட்டர் துளை ஏற்படுத்தும் வலிமை கொண்டது. மேலும் துளையிடும் போதே, துளையில் குழாயை சொருகும் வசதி பெற்றது.

இதுகுறித்து பிஆர்டி நிறுவன மேலாண் இயக்குநர் பரந்தாமன், தரணி ஜியோடெக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்  பொறியாளர் ஜெயவேல் ஆகியோர் கூறியதாவது: உத்தரகாசியில் சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிக்கு, தரணி ஜியோடெக் நிறுவனத்தை அரசு அணுகியது. சுரங்கம் அமைத்தல், அணை கட்டுதல், சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை, தரணி ஜியோடெக் நிறுவனம் கடந்த 25 வருடங்களாக அளித்து வந்துள்ளது. அதேபோல், தொழிலாளர்களை மீட்கும் சவாலான முயற்சியில், பிஆர்டியின் ஜிடி-5 ரிக் பயன்படுத்தப்படுகிறது.

இதில், 2 தடவை தடங்கல் ஏற்பட்டு, மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றோம். இதன் மூலம் தான், தற்போது சுரங்க பாதைக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் மற்றும் அவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று கண்டறிய, கேமரா மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டது. இதற்கு அடிப்படை பிஆர்டி நிறுவனத்தின் ஜிடி-5 ரிக் ஆகும். தற்போது மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்னும் சில மணி நேரத்தில் தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்தில் இருந்து பாதுகாப்புடன் மீட்கப்படுவார்கள். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்த இடத்தில் 41 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. அத்துடன் 2 ஹெலிகாப்டர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  அருகில் உள்ள மற்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!