உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. உலகக் கோப்பை போட்டியில் ஆடிய இந்திய வீரர்களில் இஷான் கிஷன், சூர்யகுமார் மாற்று வீரர் பிரசித் கிருஷ்ணா தவிர வேறு யாரும் தற்போதைய 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. மூத்த வீரர்கள் அனைவரும் ஓய்வுக்கு அனுப்பப்பட்டனர். ஹர்திக் பாண்ட்யா கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக’ சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, இஷான் கிஷன் போன்ற இளம் அதிரடி வீரர்களும், முகேஷ்குமார், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப்சிங் போன்ற பவுலர்களும் இந்திய அணிக்கு வலுசேர்க்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கான சோதனை முயற்சியாக இந்த தொடர் அமையும். அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுகிறார்.
உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தவர்களில் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித், ஆடம் ஜம்பா, ஜோஸ் இங்லிஸ், சீன் அப்போட், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் 20 ஓவர் போட்டியிலும் தொடருகிறார்கள். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 15-ல் இந்தியாவும், 10-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.