நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முன்னாள் எம்பி பேராசிரியர் சௌந்தரத்தின் மகனும், மொடக்குறிச்சி பாஜ எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதியின் மருமகனுமான ஆற்றல் அசோக்குமார். இவர் பாஜ இதர பிற்பட்டோருக்கான ஓபிசி அணியில் மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பணிகள் செய்தும், நலத்திட்ட உதவிகளை வழங்யும் வந்தார். இதற்காக அவர் கட்சிக்கு பல கோடி ரூபாய் அவர் செலவழித்து உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஈரோட்டில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட பாதயாத்திரைக்கும் அசோக்குமார் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தார். அண்ணாமலையுடன் நடைபயணத்திலும் பங்கேற்றார். அசோக்குமாரின் பணிகளுக்கு கட்சிக்குள் இருக்கும் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்து உள்ளனர்.
இதுகுறித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உரிய மரியாதை கொடுக்காமல் அவமதித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும், தனது மாமியார் பாஜ எம்எல்ஏவாக உள்ளதால் அனுசரித்து சென்றுள்ளார். அசோக் குமார் உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பை அண்ணாமலை கண்டு கொள்ளாததால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், அசோக்குமார் அதிருப்தியில் இருந்தார்.
இதையறிந்த கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர் ஒருவர், அதிமுகவில் எம்பி சீட் வழங்குவதாக உறுதியளித்து அதிமுகவில் இணைய அசோக்குமாருக்கு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ஆற்றல் அசோக்குமார் திடீரென பாஜவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து சென்னை பசுமை வழிச்சாலை செவ்வந்தி இல்லத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்த ஆற்றல் அசோக்குமார், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அண்ணாமலை தலைமை மீது புகார் அளித்து கட்சிக்குள் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே வெளியேறி உள்ள நிலையில், அக்கட்சியின் மாநில ஓபிசி அணி துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் பாஜவில் இருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இணைந்தது குறித்து அசோக்குமார் கூறுகையில், ‘ஈரோடு மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன். அதிமுகவை சிறப்பாக வழி நடத்தி வரும் பொதுச் செயலாளர் எடப்பாடி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. எனது சமூக பணியை மேம்படுத்துவதனால் மக்களிடம் அதிமுக போன்ற பெரிய இயக்கத்திற்கு மேலும் செல்வாக்கு கூடும். இவ்வாறு அவர் கூறினார்.