Skip to content
Home » மணல் குவாரி விவகாரம்.. விசாரணைக்கு ஆஜராக 8 கலெக்டர்களுக்கு E.D சம்மன்?

மணல் குவாரி விவகாரம்.. விசாரணைக்கு ஆஜராக 8 கலெக்டர்களுக்கு E.D சம்மன்?

தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் விற்பனை செய்யப்படும் ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரி மையங்கள் மற்றும் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் வீடுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில்  சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சென்னை எழிலகத்தில் உள்ள கனிமவளத் துறை அலுவலகம் மற்றும் நீர்வளத் துறைமுதன்மை பொறியாளர் முத்தையா அறையிலும் சோதனை நடந்தது.

இந்த சோதனைகளில் ரூ.12.82 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.2.33 கோடி பணம் மற்றும்ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது. இந்த சோதனையின் தொடர்ச்சியாக  நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டும் எனதமிழக நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையாவுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதை ஏற்று நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு முத்தையா ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரம் இடைவிடாமல் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. நேற்று 2-வது நாளாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் முத்தையா, ஆஜரானார். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அவரிடம்விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில்  மணல்குவாரி இயங்கிய திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், கரூர், திருவள்ளூர், நாமக்கல், தஞ்சை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!