உலகின் மிக ஆபத்தான தொழிலில் ஈடுபடும் மீனவர்களை போற்றும் வகையில் நவம்பர் 21ஆம் தேதி ஆண்டுதோறும் உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி மீனவர் தினத்தையொட்டி உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கும் வகையில் நீர் நிலைகளில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள பாண்டவையாற்றில், இரையான்குடி தடுப்பணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் 5000 மீன் குஞ்சுகளை இருப்பு செய்தனர். கருஞ்சேல், கெண்டை, ரோகு மற்றும் மிர்க்கால் உள்ளிட்ட ரக மீன்கள் விடப்பட்டது. இதன்மூலம் இறையாங்குடி, செம்பியன்மாதேவி , மோகனூர், கில்லுக்குடி, வடக்குபனையூர், அகரம், வேப்பஞ்சேரி, பாலக்குறிச்சி, சோழவித்யாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த உள்நாட்டு மீனவர்கள் பயனடைவர்.