குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயண பேரணி இன்று நாகையில் நடைபெற்றது. தமிழக சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை,மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், மீனவ பெண்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். பேரணியில், குழந்தை வன்கொடுமை கூடாது
என்றும் குழந்தைகளுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் மற்றும் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். முன்னதாக, பள்ளி குழந்தைகளுக்கு ரோஜா பூக்களை வழங்கிய ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்,SP.ஹர்ஷ்சிங் ஆகியோர், அங்கு மீன் விற்பனை செய்த மீனவப் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.