தமிழகத்தில் 40 சதவீதத்துக்கு மேல் விற்பனையான பச்சை நிற பால்பாக்கெட் விநியோகம் வரும் 25-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும், தொடா்ந்து அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும் எனவும் ஆவின் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் நிறுவனமான ஆவின், மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டா் பாலை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் 4 வகை பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 40 சதவீதம் இடம் பெற்றுள்ளது.
40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக இது அமைந்துள்ளது. பச்சை நிற பால் பாக்கெட் லிட்டா் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் 4.5 கொழுப்புச் சத்துள்ள பாலை லிட்டா் ரூ.44-க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களிலிருந்து வெண்ணெய், பால் பவுடா் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதனால், பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை ஆவின் படிப்படியாகக் குறைத்து, டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளா்களை மாற்றி வருகிறது என்ற தகவல் பரவியது. சென்னை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது. தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை வரும் 25-ம் தேதி முதல் நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஆவின் நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொதுமக்களின் பால் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா நிறம்), சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்), நிறை கொழுப்புப் பால் (ஆரஞ்சு நிறம்) ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையிலும், அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த மே மாதம் முதல் சென்னையில் வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘டி’ செறிவூட்டப்பட்ட டிலைட் பால் (ஊதா நிற பாக்கெட் – 3.5 சதவீதம் கொழுப்புச் சத்துள்ளது) அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்விதத் தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது .