திண்டுக்கல் அருகே, காதலித்து ஏமாற்றிவிட்டதாக இளைஞரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து மோசடியில் ஈடுபட முயன்ற பெண் உட்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரியான குருவையா என்பவரது மகன் ரோஷன் (27). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவரது மகள் உஷா (31) என்பவருடன் ஃபேஸ்புக்கில் பழகி வந்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் உஷாவுடன் பேசுவதை ரோஷன் நிறுத்தியுள்ளார். ஆனால் அதன் பிறகும் ரோஷனின் செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து உஷா போன் செய்து தொல்லை கொடுத்து வந்ததால் அவரது எண்ணை ரோஷன் பிளாக் செய்துள்ளார்.
இந்நிலையில் குருவையா பூ மார்க்கெட் பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது உஷா மற்றும் கொங்கப்பட்டியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் (55), சிவஞானம் (45), திருப்பூர் கூத்தம்பாளையத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி கிருஷ்ணவேணி (40) ஆகியோர் குருவைய்யாவை வழிமறித்து 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் குருவையா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய உஷா என்கிற கமலேஸ்வரி, சிவஞானம், கிருஷ்ணவேணி ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் உஷா என்கிற கமலேஸ்வரி, இதேபோல் பல்வேறு வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்துவது போல் பழகி பணம் பறித்து இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் ஏமாந்த இளைஞர்கள் குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.