தஞ்சாவூரை சேர்ந்தவர் எஸ். சங்கரநாராயணன் (35 ) பொறியியல் பட்டம் பெற்று அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்தவரும், எம்.ஏ. சைக்காலஜி படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவருமான அன்னி டிக்சன் (35) என்பவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு ஏது மொழி, நாடு, எந்த எல்லைகளையும் அடித்து நொறுக்கும் சுனாமிக்கு ஒப்பான சக்தி காதலுக்கு உண்டல்லவா?
இக்காதலை இரு தரப்பு பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, இருவருக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இதன்படி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சங்கரநாராயணன் – அன்னி டிக்சன் திருமணம் வாழ்த்து கோஷங்கள் மத்தியில் நேற்று நடந்தது.
தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மந்திரங்கள் தமிழில் ஓதப்பட்டது. மேலும் மணமகன் சங்கரநாராயணன் திருக்குறள் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் .
இவ்விழாவில் சங்கரநாராயணன் பெற்றோர், உறவினர்கள், அமெரிக்காவில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அன்னி டிக்சன் பெற்றோர், உறவினர்கள் பங்கேற்றனர். அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அனைவரும் தமிழ்ப் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்து நம் பாரம்பரியத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இந்த காதல் ஜோடிகள் திருமண தம்பதிகளாக அனைவரிடம் வாழ்த்துக்கள் பெற்றனர்.