தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பவுண்ட் கும்பகோணம்- திருவையாறு மெயின் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கும்பகோணம் மாநகரச் செயலர் ராகுல் தலைமை வகித்தார். இதில் பாபநாசம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் நவீன், நிசாந்த் உட்பட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கும்பகோணம் – திருவையாறு மெயின் சாலையில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். சரியான நேரத்திற்கு பேருந்துகளை இயக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப் பெற்ற சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பிற்கு ஆளானது. இதில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில் இந்தச் சாலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. எட்டு பேருந்துகள் சென்று வந்த நிலையில் 3 பேருந்துகள் மட்டுமே தற்போது செல்கின்றன. கபிஸ்தலம் பவுண்ட் பகுதியில் பேருந்து ஸ்டாப்பில் பேருந்து நிற்பதில்லை. பஸ் நிறுத்தத்தை தாண்டியே பஸ் நிற்கிறது. நேரத்திற்கு பஸ் இல்லாததால் கல்லூரிக்கு தாமதமாக செல்ல வேண்டியுள்ளது. பாபநாசத்தில் அரசு கலை கல்லூரி இருந்தால் நாங்கள் ஏன் கும்பகோணம் செல்ல வேண்டும் என்றனர். கபிஸ்தலம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கை விடச் செய்தனர்.