உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் இந்த போட்டியை நிறுத்தும்படி காலிஸ்தானிய பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட, சீக்கியர்களுக்கான நீதி என பொருள்படும் சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் என்ற தடை செய்யப்பட்ட காலிஸ்தானிய அமைப்பின் நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னுன். அவர், வீடியோ ஒன்றை வெளியிட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளார்.
அதில், ஆமதாபாத் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நாளை நடைபெறவுள்ள ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை நிறுத்தும்படி மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றியும் வீடியோவில் அவர் பேசியுள்ளார். 1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் வன்முறை ஆகியவற்றை பற்றியும் வீடியோவில் அவர் பேசியுள்ளார். அவரது இந்த மிரட்டல் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.