தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, சர்வதேச குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான தினத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி குழந்தைகளுக்கான நடை எனும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி ஆனது மத்திய பேருந்து நிலையம் வழியாக கலையரங்கம் வணிக வளாகம் வரை சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வன்முறைக்கு எதிராகவும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஓழிப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் குழந்தைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் என
200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியின் போது குழந்தைகள் மௌன நாடகம், சிலம்பம், கத்தி சண்டை, நிஞ்சா விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முன்னதாக மாவட்ட ஆட்சியர் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டனர்.