திருச்சி துறையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் காருக்குள் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தளி ரோடு முனீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஷ்(22), ஓசூர் மஞ்சு ஸ்ரீ நகரைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி(22) ஓசூர் பழைய மதகிரி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் குமார்(22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி ஆல்டோ கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கண்ட 3 பேரும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த விக்கி என்பவரிடம் இந்த கஞ்சாவை வாங்கிக் கொண்டு சில்லறை விற்பனைக்காக திருச்சிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. முக்கிய குற்றவாளியான விக்கியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.