இயக்குநரும், நடிகருமான சேரனின் தந்தை பாண்டியன் உடல்நலக் குறைவால் சொந்த ஊரில் இன்று காலமானார். இந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ’வெற்றிக்கொடி கட்டு’, ‘தவமாய் தவமிருந்து’, ‘ஆட்டோகிராஃப்’ போன்ற பல படங்களை இயக்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமல்லாது நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். சேரனின் தந்தை எஸ். பாண்டியன் இன்று காலை 6 .30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவர்களது வீட்டில் இயற்கை எய்தினார். 84 வயதான பாண்டியன் சினிமா ஆபரேட்டராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. தனது தந்தை சினிமா ஆபரேட்டராக இருந்ததும் தனக்குள் சினிமா ஆர்வம் ஏற்படக் காரணம் என சேரன் காமதேனு யூடியூப் தளத்தில் கொடுத்திருந்த நேர்காணலில் பகிர்ந்திருந்தார்.
