உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்திய அணி நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் – ஷுப்மன் கில் கூட்டணி ஓப்பனிங் செய்தது. போல்ட்டின் முதல் பந்தே 2 ரன்கள் விளாசிய ரோகித், முதல் ஓவரில் மட்டும் இரண்டு பவுண்டரிகளுடன் 10 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புல் ஷாட் சிக்ஸர்கள் , பவுண்டரிகள் என அதிரடி காட்டிய ரோகித் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 47 ரன்கள் குவித்தது.விரைவாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9வது ஓவரில் டிம் சவுதியின் பந்துவீச்சில் 47 ரன்களுக்கு விக்கெட்டானார். இதையடுத்து, விராட் கோலி களம்புகுந்தார். ரோகித் சென்ற பின் ஷுப்மன் கில் மட்டையை சுழற்றினார். இதனால், 12.2 ஓவர்களில் ஷுப்மன் கில் சிக்ஸர் அடிக்க இந்திய அணி 100 ரன்களை எட்டியது. இதற்கு அடுத்த ஓவரில் ஷுப்மன் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். கில்லின் 13வது ஒருநாள் அரைசதம் இதுவாகும்.
தொடர்ந்து இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 79 ரன்கள் எடுத்திருந்தபோது ஷுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டார். அவரை அணியின் பிசியோ சோதித்து பார்த்தார். பின்னர் ரிட்டையர் ஹர்ட் முறையில் விளையாடாமல் பெவிலியன் திரும்பினார் கில். அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். கில் சென்ற பிறகு விராட் கோலி பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். 60 பந்துகளை சந்தித்த கோலி, 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 29வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. தொடர்ந்து கோலியுடன் ஸ்ரேயஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஸ்ரேஸ்ஐயர் அரை சதம் அடித்த நிலையில் விராட் கோலி எதிர்பார்த்தபடி, வரலாற்று சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்து 50வது சதத்தை அடித்த கோலி 106 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இதன்பின் 117 ரன்களில் டிம் சவுதியின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி அவுட் ஆனார். கோலியின் விக்கெட்டுக்கு பின் ஸ்ரேயஸ் ஆட்டத்தை கவனித்துக்கொண்டார். அவரும் சில நிமிடங்களில் சதம் அடித்து அசத்தினார். 67 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் ஸ்ரேயஸ் சதம் பதிவுசெய்த நிலையில் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து திரும்பினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணிக்கு 398 என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் 39 ரன்களும், ரிடையர் ஹர்ட் ஆகி திரும்ப வந்த ஷுப்மன் கில் 80 ரன்கள் எடுத்தும் இறுதி ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில், இதுகுறித்து தன் எக்ஸ் தளத்தில் சச்சின் டெண்டுல்கர், “ இந்திய டிரஸ்ஸிங் அறையில் உங்களை முதன்முதலில் நான் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கிண்டல் செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள்.
அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியடைய முடியாது.
அதுவும் மிகப் பெரிய அரங்கில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், எனது சொந்த மைதானத்தில் நடந்திருக்கிறது” என தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.