தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்த பெண் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கண்ணம்மை (51). இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். பணியின் காரணமாக குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் தங்கி உள்ளனர். இவரது மகன் அரவிந்த் (20). தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
தீபாவளி விடுமுறைக்காக சுப்பிரமணியன் தனது மனைவி கண்ணம்மை, மகன் அரவிந்த் ஆகியோருடன் காரைக்குடிக்கு வந்திருந்தார். பின்னர் நேற்று முன்தினம் அரவிந்தை அவர் படிக்கும் பல்கலைக்கழகத்தில் கொண்டு விடுவதற்காக காரில் தஞ்சைக்கு வந்தனர். இந்நிலையில் மழையால் நேற்றுமுன்தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை அறியாமல் தஞ்சைக்கு வந்த சுப்பிரமணியன் பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு காரைக்குடிக்கு செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சுப்பிரமணியன், கண்ணம்மை, அரவிந்த் 3 பேரும் சாப்பிட்டு விட்டு காருக்கு அருகில் வந்தனர். அப்போது திடீரென பைக்கில் முகத்தை துணியால் மூடியபடி வேகமாக வந்த மர்ம நபர் சட்டென்று கண்ணம்மையின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். அந்த வேகத்தில் பாதி செயினை மட்டும் அறுந்து மர்மநபரின் கையில் சிக்கியது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கண்ணம்மை கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் பைக்கில் தப்பி விட்டார். மர்மநபர் அறுத்து சென்றது 3 பவுன் நகை என்று கூறப்படுகிறது. மீதி சங்கிலி கண்ணம்மை கழுத்தில் இருந்துள்ளது. இதுகுறித்து கண்ணம்மை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.