Skip to content
Home » ஆடியோ லீக் செய்தது யார் என்பது தொியும்….விளாசும் காயத்ரி ரகுராம்

ஆடியோ லீக் செய்தது யார் என்பது தொியும்….விளாசும் காயத்ரி ரகுராம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் இருந்து வந்தது. பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாகப் பேசிய ஆடியோ வெளியானது. அப்போது, சூர்யா சிவாவை நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்திருந்தார். இந்நிலையில் பாஜகவில் உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வந்ததன் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் அக்கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனாலும் பாஜக உள்விவகாரங்களைத் தொடர்ந்து பொதுவெளியில் விமர்சனம் செய்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, “திருடனைப் பாதுகாத்தால் நீயும் திருடன்தான். ஒரு ஊழல்வாதியைப் பாதுகாத்தால், நீயும் ஊழல்வாதிதான். கொலைகாரனைப் பாதுகாத்தால் நீயும் கொலைகாரன் தான். ஒரு பெண் வன்கொடுமை செய்பவரைப் பாதுகாத்தால்?” என பாஜக தலைவர் அண்ணாமலையைச் சூசகமாக விமர்சனம் செய்திருந்தார். இன்று அவரின் ட்விட்டர் பதிலில்,“அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சருக்கு எதிராகக் கடிதம் எழுதுவது சரி. பெண்களைத் தவறாகப் பேசுவதும் சரி. ராஜினாமா ஏற்கப்படவில்லை. ஆனால் வார் ரூம் ட்ரோல்கள் மோசமான வார்த்தைகளுக்கு எதிராகப் பதிலளித்ததற்காக அவசரமாக ஒரு பெண்ணை இடைநீக்கம் உடனடியாக பதவியை வேறு ஒருவருக்குக் கொடுப்பது சரியா? ஆர்.எஸ்.எஸ் தலையிடக் கூடாது என்பது தாங்கள் விருப்பமா? சந்தோஷ் ஜி-யின் வளர்ப்பு மகன் என்றால் என்ன? இதையும் வாரிசு அரசியல் என்று சொல்ல முயல்கிறீர்களா? கட்சி எப்படிச் செயல்படுகிறது என்பது பற்றிப் புரியவில்லையா? முதலில் பாஜகவை வளர்க்கப் போராடியவர்களுக்கு மரியாதை இல்லையா? எந்த ஒரு தனி மனிதனும் கட்சிக்கு மேல் இல்லை. இதை நான் உறுதியாகக் கூறுவேன். இது ஒரு ரசிகர் மன்றம் அல்ல. ஆடியோவை லீக் செய்தது யார் என்பதும் தெரியும். அவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? உண்மையையும் நோக்கத்தையும் நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *