திருச்சி, மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதியில் ஒரு வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக துர்நாற்றம் வந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இன்று காலை திருச்சி கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்பொழுது அந்த வீட்டின் அறைக் கதவு லேசாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்துகொண்டு போலீசார் உள்ளே சென்றனர்.
அங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.மேலும் அங்கு ஒரு நாய் படுத்துக்கிடந்தது. அந்த நாய் யாரையும் சடலத்தின் அருகே நெருங்க விடாமல் தொடர்ந்து குரைத்துக் கொண்டு இருந்தது.
இதனை பார்த்த போலீசார் அந்த நாயை அங்கிருந்து விரட்டினர். இறந்து கிடக்கும் நபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் பெயர் மதியழகன் (55) என்பதும், அவர் தாயுடன் தனியாக வசித்து வந்தார். மதியழகன் நிரந்தர வேலை எதுவும் இன்றி, அவ்வப்போது கூலி வேலை செய்து வந்ததாக தெரிகிறது.
மலைக்கோட்டை கோவிலில் அன்னதானம் சாப்பிட்டு ஜீவனம் செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது தாய் இறந்ததாக தெரிகிறது.இதனால் மதியழகன் மனம் உடைந்து காணப்பட்டாா். இதனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கவனிக்க ஆள் யாரும் இல்லாத காரணத்தால் உடல் நலிவுற்று இறந்து விட்டதாக தெரிகிறது.
இறந்த மதியழகனின் தம்பி செவந்திலிங்கம் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து அண்ணன் உடலை பெற்று தகனம் செய்து கொள்வதாக கூறினார். இதையடுத்து கோட்டை போலீசார் செவந்தி லிங்கத்திடம் மதியழகன் உடலை ஒப்படைத்து விட்டு சென்றனர்.