இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (நவ.14) காலை ஒருகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று நிலவக்கூடும். இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழகம், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார். நேற்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.