மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிரபல நடிகையான நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மஞ்சுநாத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பெரிய ஹோட்டலில் ‘எம்.எஸ்.எம்.இ புரொமோஷன் கவுன்சில்’ என்ற அமைப்பின் சார்பில், மத்திய அரசிடம் இருந்து சிறு, குறு தொழில் செய்ய கடன் பெற்றுத் தரப்படுவதாகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ‘எம்.எஸ்.எம்.இ புரொமோஷன் கவுன்சில்’ அமைப்பினுடைய தேசியத் தலைவர் முத்துராமன், தமிழ்நாடு சேர்மன் சௌத்ரி (நடிகை நமீதாவின் கணவர்), செயலாளர் ஷ்யந்த் யாதவ் என பலரும் கலந்துகொண்டார்கள்.
இதனையடுத்து, இந்த அமைப்பு ஏமாற்று வேளையில் ஈடுபட்டதாகவும், அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தது. பின், ஃபைனான்ஸியர் கோபால்சாமி என்பவர் தன்னிடம் பணமோசடி செய்ததாக சேலம் சூரமங்கலம் காவல்துறையில் புகார்அளித்தார். இதன் அடிப்படையில், துஷ்யந்த் யாதவ் மற்றும் முத்துராமன் ஆகிய இருவோரின் மீது போலீஸார் 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, இருவரையும் கைதுசெய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில் நமீதாவின் கணவர் சவுத்ரியிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில், தற்போது நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மஞ்சுநாத் ஆகியோர் நேரில் ஆஜர் ஆகவேண்டும் .