மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி (துலா) மாத அமாவாசை தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர்.
மக்கள் எல்லோரும் தங்கள் பாவங்களை போக்க கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுகிறார்கள். இதனால் நாங்கள் புனிதம் கெட்டு விட்டோம். இதை நாங்கள் எப்படி போக்குவது என கங்கை உள்ளிட்ட புனித நதிகள் இறைவனிடம் கேட்டதாம்.
அதற்கு இறைவன், மயிலாடுதுறை சென்று காவிரி துலாக்கட்டத்தில் புனிதநீராடினால் மீண்டும்புனிதமாவாய் என கூறியதன்பேரில் கங்கை முதலான புண்ணிய நதிகள் மயிலாடுதுறைதுலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி புனிதம் பெற்றதாக ஐதீகம்.
ஆண்டுதோறும் ஐப்பசி 1ம் தேதி தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் இங்கு தொடங்கி 30 நாட்களும் தீர்த்தவாரி நடைபெறும். நேற்று அமாவாசை தீர்த்தவாரி நடந்தது.
அதேபேல் இவ்வாண்டு துலா மாத பிறப்பு தீர்த்தவாரி விழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. அமாவாசை தீர்த்தவாரி விழா நேற்று நடந்தது. அதனையொட்டி திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான படித்துறை, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர்சுவாமி, தெப்பக்குள காசிவிஸ்வநாதர் ஐப்பசிமாத அமாவாசையொட்டி வதானேஸ்வரர் கோயிலில் இருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி காவிரிக்கரைக்கு எழுந்தருளினர். தொடர்ந்து காவிரியின் இருகரையிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சுவாமிதீர்த்தம்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.