Skip to content
Home » ராணிப்பேட்டை…….பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பரிதாப பலி

ராணிப்பேட்டை…….பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பரிதாப பலி

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் ( 28), டிரைவர். இவரது மனைவி அஸ்வினி (25).  இந்த தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார். தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வேண்டுமென நவீஷ்கா தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து ரமேஷ் தனது மகளுடன் கடைக்கு சென்று விதவிதமான பட்டாசுகளை வாங்கி வந்தனர். நேற்று மாலை நவீஷ்கா தனது குடும்பத்தினருடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். தந்தை ரமேஷ் விதவிதமான பட்டாசுகளை வெடித்தார். அதனை பார்த்து சிறுமி மகிழ்ச்சியடைந்தார். பட்டாசு வெடிக்கும் பொழுது நவிஷ்கா ஆனந்தத்தில் துள்ளி குதித்து, அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்.

அப்போது சிறுமியின் பெரியப்பாவான ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31) பெரிய அணுகுண்டு வகை பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி பட்டாசு அருகே சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஓடிப்போய் சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்து சிதறி விக்னேஷ் மற்றும் சிறுமியின் மீது விழுந்தது. இதில் விக்னேசுக்கு வலது கையிலும், சிறுமிக்கு கை மற்றும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் நவிஷ்கா அலறி துடித்தாள்.

இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவிஷ்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர். ஆஸ்பத்திரியில் குழந்தையின் தாய் அஸ்வினி கதறி அழுதகாட்சி காண்பவர்களின் நெஞ்சை கரையச் செய்தது. சிறுமியின் பெரியப்பா விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாழைபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *