தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியின் சிறப்புகளில் ஒன்று பட்டாசு வெடிப்பது. கடந்த 2 நாட்களாக மக்கள் பட்டாசுகளை வெடித்து பண்டிகை கொண்டாடினர். திருச்சி மாநகரின் மையப்பகுதியாக விளங்கும் சின்னக்கடை வீதி. பெரிய கடைவீதி,
கல்லூரி சாலை, சிங்காரத்தோப்பு, மேல புலிவார்ரோடு,
நந்தி கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை முழுவதும் தற்காலிக கடைகள் புற்றீசல் போல முளைத்தன.
விடிய விடிய சாலையோ கடைகள் செயல்பட்டதால் தலையணை உறை, படுக்கை விரிப்புகள், காதணிகள், காலணிகள், துணிமணிகள் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றனர். வியாபாரிகள் வீசி சென்ற பை உள்ளிட்ட பிளாஸ்டிக் குப்பைகள் சாலை முழுவதும் மலைபோல் குவிந்து கிடந்தது.
தீபாவளி அன்று விடுமுறை என்பதால் குப்பைகள் அள்ளப்படாமல் டன் கணக்கில் குப்பைகள் தேங்கி கிடந்தன. திருச்சி மாநகரை பொருத்தவரை சாதாரண தினங்களில் நாளொன்றுக்கு 400 முதல் 450 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் தீபாவளி என்பதால் குப்பை இரு மடங்காகி ஏறத்தாழ 900 டன் குப்பைகள் சேர்ந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்
குப்பைகளை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவன பணியாளர்கள் உட்பட ஏறத்தாழ 2500 பேர் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோன்று குப்பை அள்ளும் வாகனங்களும் மிகை நேரமாக இயக்கப்படுகிறது.
அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் அரியமங்கலம் குப்பை கிடங்கில் மக்கும் குப்பைகள்,
மக்கா குப்பைகள், பிளாஸ்டிக் என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் அனைத்தும் உரமாக்கப்படும்.
பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்
என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்