மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற துலா உற்சவமான கடைமுழுக்கு விழா வரும்16-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவ்விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து புனிதநீராடுவர். கடந்த ஒருமாதகாலமாக காவிரிஆற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்ததுடன் கடைமுக தீர்த்தவாரிக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடைமுக தீர்த்தவாரிக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நடவடிக்கை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து கல்லணையிலிருந்து வினாடிக்கு 1046 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்திற்கு வந்து சேர்ந்தது. இதைக் கண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.