தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. குறிப்பாக காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டது. எனினும் நேற்று காலை முதலே சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்பட்டது. அரசின் விதிப்படி, குறிப்பிட்ட நேரங்களில் அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கியதை அடுத்து சென்னையில் காற்று மாசு மேலும் அதிகரித்தது. சென்னையின் அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியது. குறிப்பாக, சென்னை அசோக் நகர் ஸ்ரீதேவி காலனியில் -147, கொடுங்கையூர் பகுதியில் – 150 என்ற அளவை தாண்டிச் சென்றது. சென்னையின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். எனினும், ராயபுரம், அண்ணா சாலை போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் 100க்கும் குறைவாக இருந்தது.