‘மாண்டஸ்’ புயல்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்:
9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் தன்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும் போது, அதனை ஏற்று நிவாரண முகாம்களில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை
ஆணையம் (முகநூல், டுவிட்டர்), TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு.