தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு சிங்கம் படத்தின் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்தில் விஷாலுடன் நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.. கடந்த சில நாட்களாக விஷால் படத்தின் படப்பிடிப்பு திருச்சி – சிதம்பரம் சாலை,லால்குடி அருகே சிறுமருதூர் கிராமத்தில் நடந்து வந்தது. நேற்றைய தினம் படப்பிடிப்பு நடந்த பகுதி வழியாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது சொந்த ஊரான காணக்கிளியநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அமைச்சர் நேரு செல்வதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் வணக்கம் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் நேரு தனது காரை நிறுத்தினார். உடனே நடிகர் விஷால் டைரக்டர் ஹரி, நடிகர் சமுத்திரகனி ஆகியோர் அமைச்சர் நேருவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர். இந்த சந்திப்பின் போது திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரமணி, மேற்கு மாநகர செயலாளருமான மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.