Skip to content
Home » வசூல் யாத்திரை நடத்துகிறாரா அண்ணாமலை? பகீர் ஆடியோ….. நடிகை நமீதா கணவரும் சிக்குகிறார்

வசூல் யாத்திரை நடத்துகிறாரா அண்ணாமலை? பகீர் ஆடியோ….. நடிகை நமீதா கணவரும் சிக்குகிறார்

  • by Senthil

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை  பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரைக்கு மிக  அதிக அளவு பொருட் செலவு செய்யப்படுகிறது என அனைத்து கட்சிகளும்  கூறி வருகிறது. இந்த பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்  சி.வி. சண்முகம், அண்ணாமலை வசூல் யாத்திரை நடத்துகிறார் என்று  கூறினார்.

இப்போது  சி.வி. சண்முகம் சொன்னது உண்மை தான் என நம்பும் அளவுக்கு ஒரு ஆடியோ கால் வெளியாகி உள்ளது.  அதன் விவரம் வருமாறு:

எம்எஸ்எம்இ புரமோசன் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் சிறு தொழில் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து கடன் பெற்றுத் தருவதாக கூறி சேலத்தில்  ஒரு கூட்டம்  நடத்தப்பட்டது. இந்த அமைப்பின் தேசிய தலைவரான மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன் (60), செயலாளரான பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் (34), தமிழ்நாடு சேர்மனான நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி ஆகியோர்  இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பதவி தருவதாக கூறி ரூ.41 லட்சத்தை வாங்கி ஏமாற்றிவிட்டதாக சேலம் ஜாகீர்அம்மாப்பாளையத்தை சேர்ந்த பைனான்சியர் கோபால்சாமி புகாரின்பேரில்  முத்துராமன், துஷ்யந்த்யாதவ் ஆகியோரை சூரமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் முத்துராமனுக்கு 4 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புகார்தாரர் கோபால்சாமியும், முத்துராமனும் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆடியோவில் பேசப்படுவதாவது:

* கோபால்சாமி: நான் கேட்ட 15 லட்சம் நாளைக்கு கிடைக்குமாண்ணே?
* முத்துராமன்: நாளைக்கு…இங்கு வேறு அமவுண்ட டில்லிக்கு அனுப்ப சொல்லிட்டாங்க. ஒரு விஷேச நிகழ்ச்சியில பணத்தை ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன். இதுவரை 30 கொடுத்திருக்கோம். இன்னும் 50 அனுப்பிட சொல்லிட்டாங்க. 27 ரூபாய் ரெடி பண்ணிட்டேன், பாக்கி யாருக்கிட்ட வாங்கபோறேன்னு தெரியல. காலையில மந்திரி ஆபீசுக்கு அனுப்புங்கன்னு சொல்லிட்டாங்க. யாரிடம் கேட்கன்னு தெரியல.

ரொம்பவும் டைட்டா போயிகிட்டிருக்கு. அண்ணாமலை வந்தாருல்லா. சிவகங்கைக்கு ஒன்றரை கோடி ரூபா கொடுத்து விட்டேன், மதுரைக்கு வந்துட்டாரு. ரூ.75 இல்லன்னா ஒன்னாவது கொடுங்கன்னு கேட்டாங்க. 50 தந்துவிடுகிறேன் என்றேன். இருப்பதை கொடுத்து விடுங்கன்னு சொல்லிட்டாங்க. இப்போது அதுக்குத்தான் ஓடிக்கிட்டிருக்கேன். இதெல்லாம் செய்தே ஆகணும். ஒரு சில விஷயங்களை வெளிய சொல்ல முடியல. அவ்வளவு செலவுகள் போயிட்டிருக்கு. உண்மையிலே காசு இல்லாம விஷேச வீட்டில் இருப்பதை பறக்கிக்கிட்டு வந்தேன். கேவலமான சூழ்நிலையா இருக்கு…’

இவ்வாறு இருவரும் பேசி இருக்கிறார்கள். மேலும் கைதான முத்துராமன், துஷ்யந்த் யாதவ் மற்றும் கோபால்சாமி ஆகியோர் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து பேசிய புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் பாஜ நிர்வாகிகளுக்கு இதில் பெரும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!