தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று விடிய விடிய இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் நேற்று ஆய்வு செய்து பயணிகளிடம் பஸ் வசதி ஏற்பாடு குறித்து நேரில் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: நேற்று முன்தினம் தினசரி இயங்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 634 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு 1,37,000 பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று மாலை 5 மணி வரை 69 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
மொத்தமாக காலை முதல் மாலை வரை சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 4,176 பேருந்துகளில் 2 லட்சத்து 6 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருந்த நிலையில் இந்த ஆண்டு பயணம் செய்ய தற்போது வரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 702 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் மட்டும் ரூ.11 கோடியே 78 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
முன்பதிவு செய்யாமல் மக்கள் கூடுதலாக பயணம் செய்ய வந்தாலும் கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை கிடைத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் அரசு பேருந்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த விரும்புகின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட 5% குறைவாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். புதிதாக எந்த ஒரு புகாரும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.